காதலின் பரிமாணங்கள்
குரங்கு பெடல் போட்டு
சைக்கிள் ஓட்ட
சொல்லித் தருகையில்,
“ஏய்! இடுப்பை ஒடிக்காதே”
என்று அவள் இடுப்பில்
கை முத்தம் பதித்தது முதல் காதல்..
பத்தாம் வகுப்பு அறிவியல் நோட்டில்,
ஒரு பக்கம் கோடிடாத அந்த வெள்ளைத் தாளில்
தாவாத தவளையை அவளுக்கு வரைந்து தந்து
மனதிற்குள் தாவி குதித்தது, அந்த இரண்டாவது காதல்.
நெருக்கமான ஒரு பேருந்து பயணத்தில்,
அவள் முதுகோடு என் முதுகை உரசி செல்கையில்
நண்பனிடம்- “மல்லிகைப்பூ வாசம்
என் சட்டையில் வருகிறதா ....?”
என்று கேட்டது அந்த கல்லூரி காதல்.
திருமண பத்திரிகை அச்சடித்த பின்,
யாரிடமும் தராத அத்தனை காதல் கடிதங்களையும்,
ஒரு தீக்குச்சி முனையில், கருக்கி விட்டேன்.
மனதினை சுருக்கி விட்டேன்.
இப்பொழுது எல்லாம் தோன்றுகிறது - ஏதேனும்
ஒரு கடிதத்தை மீதம் வைத்திருக்கலாமே..? என்று .
பல்லிடுக்கில் சிக்கிய உணவுத்துகளை,
அகற்ற முடிந்த எனக்கு
நினைவடுக்கில் அகற்ற முடியாத
“காதல்” ”கள்” இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்த குரங்கு பெடல் காரி
“வலிக்கலையே..!” என்று சொன்ன வார்த்தையை போல்.
க.சசிகுமா
கருத்துகள்
கருத்துரையிடுக